திருப்பதியில் விமான பயணிகள் தரிசன திட்டம் தொடக்கம்


திருப்பதி, பிப். 14- கொரோனா தளர்வை தொடர்ந்து ஐ.ஆர்.சி.டி.சி. நிறுத்தி வைத்திருந்த ஏழுமலையான் தரிசன பேக்கேஜ் திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.
ஏற்கனவே பஸ், ரெயில் உள்ளிட்டவற்றை தொடர்ந்து பாலாஜி தர்‌ஷன் என்ற பெயரில் விமான பயணத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் டெல்லி- திருப்பதி 2 மார்க்கத்திலும் விமானக் கட்டணங்கள் தங்கும் விடுதி, உணவு, திருமலை, திருச்சானூர், காளஹஸ்தி கோவில் தரிசனக் கட்டணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த பயணத் திட்டம் நபர் ஒருவருக்கு ரூ.16,535 முதல் தொடங்குகிறது.
டெல்லியில் இருந்து காலை 6.50 மணிக்கு பக்தர்கள் விமானத்தில் புறப்பட்டு காலை 9.20 மணிக்கு திருப்பதியை அடைகின்றனர்.
அவர்களை தங்கும் அறைக்கு அழைத்து சென்று உடைமைகளை வைக்க செய்வர். அங்கிருந்து காளஹஸ்தி, சந்திரகிரி கோட்டை, பத்மாவதி தாயார் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு பஸ் மூலம் அழைத்து செல்கின்றனர்.
பின்னர் இரவு திருப்பதி அறையில் தங்கி மறுநாள் அதிகாலை திருமலைக்கு சென்று ஏழுமலையானை விரைவு தரிசனத்தில் வழிபட ஏற்பாடு செய்கின்றனர். பின்னர் திருப்பதியில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கின்றனர்.