
திருமலை: அக்.17 திருப்பதி ஏழுமலையான் கோயிலின் நவராத்திரி பிரமோற்சவத்தின் 2ம் நாளான நேற்று சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரமோற்சவம் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. முதல் நாள் இரவு ஏழு தலை கொண்ட ஆதிசேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்கு மாட வீதியில் வலம் வந்து அருள் பாலித்தார். தொடர்ந்து, 2வது நாளான நேற்று காலை 5 தலைகளுடன் கூடிய சிறிய சேஷ வாகனத்தில் பத்ரி நாராயணன் அலங்காரத்தில் தியான முத்திரையில் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெரிய சேஷ வாகனத்தை ஆதிசேஷனாகவும், சிறிய சேஷ வாகனத்தை வாசுகியாகவும் நினைத்து சுவாமி வீதிஉலா வந்ததை ஆயிரக்கணக்காண பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்று பக்தி முழக்கத்துடன் தரிசனம் செய்தனர். இந்நிலையில், வீதிஉலாவின்போது கோயில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர் தலைமையில் ஜீயர்களின் சீடர்கள் நான்காயிரம் திவ்ய பிரபந்தம் பாடியபடி வந்தனர். பிரமோற்சவத்தில் இரவு சரஸ்வதி அலங்காரத்தில், அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களின் மத்தியில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.