திருப்பதியில் 3 நாட்களுக்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் முன்கூட்டியே விநியோகம்


திருப்பதி, பிப். 21- கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
தேவஸ்தானம் இணையதளம் மூலம் ரூ.300 கட்டண தரிசன டிக்கெட்டுகளையும் திருப்பதியில் உள்ள தேவஸ்தான கவுண்டர்களில் இலவச தரிசன டோக்கன்களையும் வழங்கி வருகிறது. தற்போது தினசரி 50,000 பக்தர்கள் வரை ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.
திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் இலவச தரிசன டோக்கன்கள் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற முறையில் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒரு நாளுக்கான 25 ஆயிரம் டோக்கன் தீர்ந்துவிட்டால் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் ஏமாற்றம் அடைவதை தவிர்க்க தேவஸ்தானம் அடுத்தடுத்து நாள்களுக்கான டோக்கன்களை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது.
வருகிற 23-ந்தேதி வரைக்குமான டோக்கன்கள் வழங்கப்பட்டு விட்டதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதனால் வார இறுதி நாட்களில் ஏழுமலையான் தரிசனத்தை முடிவு செய்யும் பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.