திருப்பதி அருகே 17 யானைகள் கிராமங்களில் புகுந்து தாக்குதல்

திருப்பதி: பிப். 15:தி ருப்பதி சேஷாச்சலம் வனப்பகுதியில் சிறுத்தைகள், கரடிகள், யானைகள் போன்ற விலங்குகள் உள்ளன. ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவ்வப்போது சிறுத்தையின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இதில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
சேஷாச்சலம் வனப்பகுதியில் யானைகள் திரிந்தாலும் பெரும்பாலும் எவரையும் தாக்குவதில்லை. இந்நிலையில், கடந்த 10 நாட்களாக சேஷாச்சலம் மலையடிவாரத்தில் உள்ள சந்திரகிரி மண்டலம், சின்ன ராமாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களான யாமலபல்லி, கொண்ட்ரெட்டி கண்டிகை ஆகிய கிராமங்களில் 17 யானைகள் கொண்ட கூட்டம் வயல்களில் புகுந்து நெல், தக்காளி, வாழைப் பயிர்களை நாசம் செய்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்த போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றும் புகார் கூறுகின்றனர்.
இப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு வயலில் இருந்த மனோகர் என்ற விவசாயியை யானைகள் தாக்கின. இதில் படுகாயம் அடைந்த மனோகர், திருப்பதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யானைகள் கூட்டம்எந்த நேரத்தில் கிராமங்களில் புகுந்து தாக்குதல் நடத்துமோஎனும் பீதியில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக வனத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.