திருப்பதி கோவில் உண்டியலில் ஒரே மாதத்தில் ரூ.130 கோடி

திருமலை, ஜூன். 11
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். அதேபோன்று வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கையும் செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் உண்டியல் வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளது இந்த நிலையில் கடந்த மே மாதம் மட்டும் உண்டியல் காணிக்கையாக ரூ.130 கோடியே 29 லட்சம் வந்துள்ளது.

திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் ஒரு மாதத்தில் இவ்வளவு பெரிய தொகை வந்தது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.