திருப்பதி தரிசன டிக்கெட் விநியோகம்

திருப்பதி: மார்ச் 13:
திருப்பதி ஏழுமலையானை மிக அருகில், அதுவும் யாருடைய சிபாரிசும் இல்லாமல் தரிசிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் தரிசன டிக்கெட்டுகளை விநியோகம் செய்கிறது.
தினமும் 1,000 டிக்கெட்டுகளை வழங்கும் தேவஸ்தானம், ஆன்லைன் மூலமாக நாள் ஒன்றுக்கு 500 டிக்கெட்டுகளையும், நேரடியாக திருமலையில் தினமும் 400 டிக்கெட்டுகள் வீதமாகவும், திருப்பதி விமான நிலையத்திற்கு விமானம் மூலம் வரும் பயணிகளுக்காக தினமும் 100 டிக்கெட்டுகள் வீதம் என மொத்தம் 1,000 டிக்கெட்டுகளையும் திருப்பதி தேவஸ்தானம் விற்பனை செய்து வருகிறது.
இதில் கடந்த சில நாட்களாக விமான நிலையத்தில் வழங்கும் டிக்கெட்டுகளை தேவஸ்தானம் நிறுத்தி வைத்திருந்தது. இதனை மீண்டும் வழங்கிட வேண்டும் என வெளியூர் பக்தர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், இந்த டிக்கெட்டுகள் இன்று முதல் திருப்பதி விமான நிலையத்தில் மீண்டும் வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் ஒன்றின் விலை ரூ.10,500. இதில் ரூ.10,000 சுவாமிக்கு காணிக்கையாக செலுத்தப்படும் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்த தொகைஆந்திர மாநிலத்தில் நலிந்த, பாழடைந்த கோயில்களை புதுப்பிக்கவும், எஸ்சி, எஸ்டி, மீனவர்கள்வசிக்கும் பகுதிகளில் புதிய ஏழுமலையான் கோயில்களை கட்டவும் பயன்படுத்துவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.