திருப்பதி திருமலையில்பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம்

திருப்பதி: நவ.26- பிரதமர் மோடி இன்று மாலை விமானம் மூலம் திருப்பதி செல்ல உள்ளார். அவர் நாளை காலையில் ஏழுமலையானை தரிசனம் செய்யவுள்ளார்.
மோடி வருகையையொட்டி திருப்பதியில் அனைத்து வி.ஐ.பி. தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. அங்கு இறுதிக்கட்ட பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ன. இந்த முறை எப்படியாவது ஆளும் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்பதில் பாஜகவும், காங்கிரஸும் மிக தீவிரமாக உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா என கட்சியின் முக்கிய புள்ளிகள் தெலங்கானாவில் முகாமிட்டு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி தெலுங்கானாவில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை 7 மணியளவில் திருப்பதி செல்கிகிறார். விமானம் மூலம் புறப்பட்டு, திருப்பதிக்கு இரவு 7 மணிக்கு வருகை தர உள்ளார் பிரதமர் மோடி. ரேனிகுண்டா விமான நிலையம் வரும் பிரதமர் மோடியை, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆளுநர் அப்துல் நசீர் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்கின்றனர்.
பின்னர், விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக காரில் திருமலைக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்குள்ள விருந்தினர் மாளிகையில் இன்று இரவு ஓய்வு எடுக்கிறார். பின்னர், நாளை (நவம்பர் 27) காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். தரிசனம் முடிந்து காலை 10.25 மணிக்கு விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி மீண்டும் விமானம் மூலம் டெல்லி செல்ல இருக்கிறார். பிரதமர் மோடியின் திருப்பதி வருகையையொட்டி, திருப்பதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பதி முழுவதும் 3 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையம் முதல் திருமலை வரை பிரதமர் பயணம் செய்ய இருக்கும் வழித்தடம், அவர் திருமலையில் தங்க இருக்கும் விருந்தினர் மாளிகை, ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.