திருப்பதி நடைபாதையில் 6-வது சிறுத்தை சிக்கியது

திருப்பதி: செப். 20:
திருப்பதி நடைபாதையில் கடந்த மாதம் தனது பெற்றோர்களுடன் நடந்து சென்ற லக்ஷிதா என்ற 6 வயது சிறுமியை சிறுத்தை கடித்துக்கொன்றது. சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க நடைபாதை அருகே பல்வேறு இடங்களில் இரும்பு கூண்டு வைக்கப்பட்டது. 2 வாரங்களில் அடுத்தடுத்து 5 சிறுத்தைகள் சிக்கியது. கூண்டில் சிக்கிய சிறுத்தைகள் வெங்கடேஸ்வரா வன உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்படுகின்றன. வன உயிரியல் பூங்காவில் இருந்த 5 சிறுத்தைகளில் சிறுமியை கொன்ற சிறுத்தையை அடையாளம் காண டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது. சோதனை முடிவில் 2 சிறுத்தைகள் சிறுமியை கொல்லவில்லை என தெரிய வந்தது.
இதையடுத்து 2 சிறுத்தைகளை வன சரணாலயங்களில் விடப்பட்டன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திருப்பதி மலை பாதையில் சிறுத்தை ஒன்று சுற்றித் திரிவதை வாகனங்களில் சென்ற பக்தர்கள் பார்த்தனர். இது குறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சிறுத்தையை பிடிக்க பல்வேறு இடங்களில் இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டன. இன்று அதிகாலை அலிபிரி நடைபாதையில் உள்ள லட்சுமி நரசிம்ம சாமி கோவில் அருகே சிறுத்தை ஒன்று கூண்டில் சிக்கியது. கூண்டில் சிக்கிய சிறுத்தையை வனத்துறையினர் வெங்கடேஸ்வரா வன உயிரியல் பூங்காவுக்கு கொண்டு சென்றனர். மேலும் பக்தர்கள் நடைபாதையில் பாதுகாப்பாக செல்ல தேவஸ்தான அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். கையில் கம்புகளுடன் கோவிந்தா கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் நடந்து சென்றனர்.