திருப்பத்தூரில் அவசரமாக தரையிறங்கிய தனியார் ஹெலிகாப்டரால் பரபரப்பு

திருப்பத்தூர், அக்.18-
திருப்பத்தூர் அருகே அதிகாலையில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் அடுத்த தாதன்குட்டை பகுதியில் இன்று காலை திடீரென ஒரு ஹெலுகாப்டர் அவசரமாக தரையிறங்கியது. அதிலிருந்து 7 பேர் இறங்கியவுடன் அப்பகுதியில் திடீர் பரபரப்பு நிலவியது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஒன்று கூடினர். இதையடுத்து அவர்களிடம் விசாரணை செய்ததில் கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் எஸ்.வி.என் நகை கடை நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோயிலுக்கு காலை 5 மணி அளவில் சிப்சன் என்ற தனியார் எலிகாப்டர் வாடகை மையத்தில் இருந்து வாடகை ஹெலிகாப்டர் எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.

திருப்பத்தூர் பகுதியில் கடுமையான பனி மூட்டம் சூழ்ந்துள்ளது. பனிமூட்டம் காரணமாக பாதை தெரியாமல் பைலட் அவசர அவசரமாக ஹெலிகாப்டரை தரை இறக்கி உள்ளார். திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி பிரதான சாலை அருகே நவீன ரக ஹெலிகாப்டர் விவசாய நிலத்தில் நிற்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர். இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவி அருகில் உள்ள ஏராளமான கிராம மக்கள் ஹெலிகாப்டரை பார்ப்பதற்காக குவிந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு திருப்பத்தூர் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். பொது தனது குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு செல்கிறோம். பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டரை இறக்கியுள்ளோம், பனிமூட்டம் விலகியதும் சென்று விடுவோம் என்று கூறியுள்ளனர். இந்த சம்பவத்தால் திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.