திருமலை திருப்பதியில் 3 மாதங்களுக்கு சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது

திருப்பதி, ஏப். 6- திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் நேற்று தொலைபேசி மூலம் பக்தர்களிடம் குறைகளை கேட்கும் நிகழ்ச்சியில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி பங்கேற்றார். முன்னதாக தர்மாரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோடை விடுமுறையையொட்டி, திருமலையில் நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால், விஐபி சிபாரிசு கடிதங்களை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாட வீதிகள், நாராயணகிரி பகுதிகளில் வெயிலை சமாளிக்க தரையில் ‘கூல் பெயிண்ட்’அடிக்கப்பட்டுள்ளது. 2,500 ஸ்ரீவாரி சேவகர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கோடையில் அடிக்கடி தீ விபத்து ஏற்பாடாமல் தடுக்க சேஷாசலம் வனப்பகுதியில் வனத் துறையினர் மற்றும் தேவஸ்தான வனத்துறையினர் பணியில்அமர்த்தப்பட்டுள்ளனர் கோடையில்திருமலையில் குடிநீரை வீணாக்க வேண்டாமென பக்தர்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தர்மாரெட்டி கூறினார்.
ரூ.118 கோடி காணிக்கை: கடந்த மார்ச் மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை 21.10 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ளனர். இவர்களில் 7.86 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். 42.85 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. 1.01 கோடி லட்டு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டன. ரூ.118.49 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது.