திருவண்ணாமலை தீபத்திருவிழா: 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை

திருவண்ணாமலை, நவ. 15- திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா கடந்த 10-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு கொரோனா கட்டுப்பாடுகளும் அமுலில் உள்ளது. எனவே வருகிற 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இதேபோல் 19-ந்தேதி பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்லவும் அனுமதி இல்லை. மேலும் வருகிற 16-ந் தேதி கோவில் வளாகத்தில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுவதால் பக்தர்கள் அன்று சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. எனவே அந்த நாட்களில் வெளியூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தற்போது திருவிழாவை முன்னிட்டு தற்காலிக பஸ் நிலையங்கள் 4 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையங்கள் வருகிற 23-ந் தேதி வரை செயல்படும். ஈசானியம், செங்கம் ரோடு, காஞ்சி ரோடு, திருக்கோவிலூர் ரோடு ஆகியவற்றில் இந்த பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். வெளியூர் பக்தர்கள் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்களின் வருகை மிகவும் குறைவாக உள்ளது. சாதாரண நாட்களில் வரும் பக்தர்களின் எண்ணிக்கையை விட குறைவாக உள்ளது. மேலும் தொடர் மழையும் பக்தர்கள் வருகை குறையக் காரணம் என்று கூறப்படுகிறது.