திருவள்ளுவர் தின விழாவில் தமிழராய் ஒன்று திரளுவோம்பையப்பனஹள்ளி ரமேஷ் அழைப்பு

பெங்களூரு, ஜன. 14- அல்சூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை அருகே திருவள்ளுவர் ஜெயந்தி தினவிழாவையொட்டி தமிழராய் அனைவரும் ஒன்று திரண்டு நமது பலத்தை நிரூபிப்போம் என்று அகில இந்திய அமைப்புச்சாரா தொழிலாளர் காங்கிரஸின் தென் மாநிலங்களில் ஒருங்கிணைபாளரும், திருவள்ளுவர் ஜெயந்தி தின விழாக் குழுத் தலைவருமான‌ பைப்பனஹள்ளி ரமேஷ் கேட்டுக் கொண்டார். பெங்களூருத் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை திருவள்ளுவர் ஜெயந்தி தின விழா குறித்து நடந்த ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியது: கர்நாடகத்தில் 90 லட்சத்திற்கு அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஏறக்குறைய ஒரே கோடி மக்கள் தொகையாக உள்ள நாம், ஒற்றுமையின்மையால் சிதறிக் கிடக்கிறோம். இதனால் நமக்கு அரசியல் பயன் உள்பட வேறு எதுவும் கிடைக்காத நிலையில் உள்ளோம். கர்நாடகத்தில் தமிழர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி நாம் யார் என்பதனை அனைவருக்கும் காண்பிக்கும் நோக்கில் ஒரு மையப் புள்ளியாய், இந்த திருவள்ளுவர் ஜெயந்தி தின விழாவை கொண்டாடி வருகிறோம்.நிகழாண்டு கொண்டாடப்படும் திருவள்ளுவர் ஜெயந்தி தின விழாவில் ஜாதி, பேதம், மதம், மொழி கடந்து அனைத்து மக்களும் விழாவில் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும். பரந்த நிலையில் விரிந்து கிடக்கும் தமிழர்கள் திருவள்ளுவர் ஜெயந்தி தின விழாவில் தமிழர்களாய் ஒன்று திரளுவோம். இந்த நிகழ்ச்சியை நடத்துவதால் நான் பெரிதாக பயன் அடைந்து விடுவேன் என்று ஒரு சாரார் கருதுகின்றனர். இதனால் எனக்கு தனிப்பட்ட பயன் எதுவும் வேண்டாம் என்பதனை கூற கடமை பட்டுள்ளேன். திருவள்ளுவர் ஜெயந்தி விழா மூலம் தமிழர்களை ஒன்று திரட்ட வேண்டும் என்பதே எனது நோக்கும். தமிழர்கள் இன்னும் அடிமை எண்ணம் கொண்டு வாழ்வதை தவிர்த்து,
அனைத்து உரிமைகளையும் பெற்று மானம் கொண்டு வாழுவதற்கான வழி காண வேண்டும். எனவே சுயநல‌மில்லாமல் நடத்தும் திருவள்ளுவர் ஜெயந்தி தின விழாவில் வரும் ஜன. 16 ஆம் தேதி தமிழர்கள் குடும்பத்துடன் திரளாக கலந்து கொண்டு திருவள்ளுவரை போன்ற வேண்டும். திருவள்ளுவர்தான் நமது அடையாளம் என்பதனை யாரும் மறந்து விடக்கூடாது. தமிழ்ப் பண்பாட்டையும், கலாசாரத்தை மீட்டெடுக்கும் வகையில் இந்த விழாவை நாம் அனைவரும் ஒன்றிணைந்து நடத்த வேண்டும். வாருங்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு பெங்களூரு அல்சூரில் நடைபெறும் திருவள்ளுவர் ஜெயந்தி விழாவை சிறப்பாக கொண்டாடும். செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் தொடங்கி நடைபெறும் திருவள்ளுவர் ஜெயந்தி விழாவில் மாநிலத்தின் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், அமைச்சர்கள் ராமலிங்கரெட்டி, கே.ஜே.ஜார்ஜ், தினேஷ் குண்டுராவ், ஜமீர் அகமதுகான், கிருஷ்ணபைரேகௌடா, எம்.எல்.ஏக்கள் ரிஸ்வான் அர்ஷத், ஹாரீஷ் உள்ளிட்டோர் மட்டுமின்றி, தமிழ், கன்னட, உருது, தெலுங்கு, மலையாளம், துளு மொழிகளைச் சேர்ந்த பல ஆளுமைகள் கலந்து கொள்ள உள்ளனர். வரும் காலங்களில் தமிழே நமது உயிர் மூச்சு என்ற கருத்தியலுடன் தமிழர்கள் அனைவரும் ஒரு புள்ளியில் இணைந்து, ஒற்றுமையுடன் நமது உரிமைகளை பெற்று அனைத்து துறைகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எந்த துறைகளில் தமிழர்கள் வெற்றி பெற்றாலும், அவர்கள் அனைவருக்கும் நாம் கைக்கோர்த்து ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இனி கர்நாடகம் மட்டுமின்றி, சர்வதேச அளவில் தமிழர்கள் ஒன்றுபட்டால் தமிழ் வெல்லும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழ். வளர்க தமிழர்கள்.
போற்றுவோம் திருவள்ளுவரை என்றார். ஆலோசனைக் கூட்டத்தில் ரகுதேவராஜ், கோபிநாத், ஸ்ரீதரன், செந்தில், விஸ்வநாதன், விஜயன், சம்பத், ராஜசேகரன், பலராமன், ராஜேந்திரன் சென்னிதாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.