திருவாரூர்: ஏப்ரல் 7 உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் ஆலய பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆழித் தேரோட்டம் தொடங்கியது. மிகவும் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 15ம் தேதி தொடங்கியது.
நேற்று இரவு 8 மணியளவில் தியாகராஜ சுவாமி, அஜபா நடனத்துடன் தேரில் எழுந்தருளினார். இன்று காலை 5.30 மணி அளவில் விநாயகர், சுப்பிரமணியர், தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதனையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் காலை 7.30 மணி முதல் நடைபெற்று வருகிறது. 96 அடி உயரமும்,
350 டன் எடையும் கொண்ட ஆழித்தேர் தேரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். ஆழித் தேரோட்டத்தில் பங்கேற்க உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவாரூரில் குவிந்துள்ளனர். பிரமாண்ட தேர் 4 வீதிகள் வழியாக வலம் வரும் என்பதால் 2000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேரோட்டம் காரணமாக திருவாரூரில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.