திஷா ரவிக்கு ஜாமீன்


பதுடெல்லி.பிப்23- டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சூழலியல் ஆர்வலர் திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் மூன்று மாதங்களாக தொடரும் இந்தப் போராட்டத்தில் இதுவரை இரு தரப்பினருக்கும் இடையே எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
இந்த விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு சர்வதேச பிரபலங்களும் ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தார்.
அந்த ட்வீட்டில் டூல்கிட் லிங்க் ஒன்றை பகிர்ந்திருந்தார். விவசாயிகள் போராட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து அதில் விளக்கப்பட்டிருந்தது. குடியரசு தின டிராக்டர் பேரணியின் போது ஏற்பட்ட கலவரத்திற்கும் இந்த டூல்கிட்டிற்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், காலிஸ்தான் ஆதரவாளர்களுடன் இணைந்து இந்த டூல்கிட்டை உருவாக்கி, கிரேட்டா தன்பெர்க்குடன் அதைப் பகிர்ந்ததாக திஷா ரவியை கடந்த வாரம் பெங்களூருவில் வைத்து டெல்லி போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற காவலில் இருந்த திஷா ரவியிடம் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்நிலையில் திஷா ரவி ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனு மீது இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஜாமீன் வழக்கை விசாரித்த நீதிபதிகள் டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சூழலியல் ஆர்வலர் திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.