தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு எதிர்ப்பு

கோவா: நவம்பர் . 29 -சுதிப்தோ சென் இயக்கத்தில், அடா சர்மா, சித்தி இட்னானி , சோனியா பலானி உட்பட பலர் நடித்த படம், ‘தி கேரளா ஸ்டோரி’. கேரளாவில் பெண்களைக் கட்டாய மதமாற்றம் செய்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்ப்பதாக இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வெளியானபோது கேரளா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் நேற்று முன்தினம் திரையிடப்பட்டது. அப்போது கொச்சியைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் ஸ்ரீநாத், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஓவியர் அர்ச்சனா ஆகியோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது இந்துத்துவா பிரச்சாரப் படம் என்ற மீம் பேப்பரையும் அவர்கள் வைத்திருந்தனர். படத்துக்கு எதிரான துண்டு பிரசுரங்களையும் அவர்கள் விநியோகித்தனர். திரையிடலுக்கு வந்த இயக்குநர் சுதிப்தோ சென்னிடம் அவர்கள் கேள்விகளையும் எழுப்பினர்.