தி.மு.க. எம்.எல்.ஏ., பா.ஜ.க.வில் இணைகிறாரா?

குளித்தலை:செப்டம்பர். 19 – கரூர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் பரவிய வண்ணம் உள்ளது. இந்த தகவல் தி.மு.க.வினர் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் குளித்தலை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மாணிக்கம் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக பா.ஜ.க.வை சேர்ந்த சிலர் பேச்சுவார்த்தை நடத்தி வெற்றிகரமாக முடிந்துள்ளது என்றும் தகவல் பரவியுள்ளது. ஆனால் அந்த தகவல் முற்றிலும் தவறானது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பெயர்களை களங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், எந்தவிதமான அடிப்படை முகாந்திரம் இல்லாமலும் அவதூறு பரப்பப்பட்டு உள்ளது. இதனால் தி.மு.க. எம்.எல்.ஏக்களுக்கு மன உளைச்சலும், மன வேதனையும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் கரூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.