தீபாவளிக்கு ஊருக்கு செல்ல 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு: இன்று முதல் சிறப்பு பேருந்துகள்

சென்னை : அக். 16-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (அக். 16) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அரசுப் பேருந்துகளில் பயணிக்க இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
வரும் 20-ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, ஜவுளி, பட்டாசு விற்பனை களைகட்டியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முந்தைய 2 நாட்களும் விடுமுறை என்பதால் பெரும்பாலானோர் நாளை (அக்.17) சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால், அரசு சார்பில் இன்று முதலே சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 760 சிறப்புப் பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 565 சிறப்புப் பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 275 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் 12 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், tnstc செயலி மற்றும் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். தீபாவளியையொட்டி சொந்த ஊருக்குச் செல்ல இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, இன்று சென்னையில் இருந்து செல்ல 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். 9445014436 என்ற எண்ணில் பேருந்துகளின் இயக்கம் குறித்து அறியலாம்.
அரசுப் பேருந்துகளில் மக்கள் இடையூறின்றி பயணிக்கும் வகையில் விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 10-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, நெடுஞ்சாலைகளில் ரோந்துப் பணிகளில் ஈடுபடுகின்றன. இவை பேருந்துகள் இயக்கத்தை கண்காணிப்பதுடன், பிரேக் டவுன் போன்ற அவசர காலங்களில் தேவையான உதவிகளையும் செய்யும். இதற்கிடையே, நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தாம்பரம், செங்கல்பட்டு காவல் துறை போக்குவரத்து மாற்றத்தை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்வோர் கிழக்கு கடற்கரை சாலை வழியாகச் செல்லலாம்.