
சென்னை: அக். 12:
தீபாவளியை ஒட்டி சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் செல்ல ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வு பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. சென்னையில் இருந்து நெல்லை செல்ல ரூ.1,800ஆக இருந்த டிக்கெட் கட்டணம் தற்போது ரூ.5,000ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல ரூ.1,100ஆக இருந்த டிக்கெட் கட்டணம் தற்போது ரூ.4,100ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 20ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் தங்கி படிக்கும், வேலைக்கு செல்லும் வெளிமாநிலத்தவர்கள் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவார்கள். அந்த வகையில் இந்தாண்டு தீபாவளிக்கு தங்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் பேருந்து, ரயில்கள், விமானங்களில் செல்ல தயாராகி வருகின்றனர். இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தீபாவளி பண்டிகைக்கு ரயிலில் முன்பதிவு கடந்த ஆகஸ்ட் 17ம்தேதி தொடங்கிய நிலையில் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகி விட்டது.
தீபாவளிக்கு ரயிலில் சொந்த ஊருக்கு செல்ல முடியாதவர்கள், அரசு பேருந்து மூலம் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல TNSTC இணையதளம் மற்றும் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெற்ற நிலையில், அதிலும் முன்பதிவுகள் முடிவடையும் நிலையில் உள்ளது.















