தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் 3 தமிழ் படங்கள்

தமிழகத்தில் தியேட்டர்கள் விரைவில் திறக்கப்பட உள்ளதால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 புதிய படங்கள் ரிலீசாக உள்ளதாம்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. புதிய படங்கள் ரிலீஸ் ஆகாததால் தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் கடும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனர். அக்டோபர் 15-ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தாலும் தமிழகத்தில் அதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இதனிடையே அக்டோபர் 22-ம் தேதி தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய படங்களை ரிலீஸ் செய்வதற்கான பணிகள் தமிழ் திரையுலகில் வேகமெடுத்துள்ளன. தியேட்டர்கள் திறக்கப்பட்டால் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு இருப்பதால், முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
இருப்பினும் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘எம்.ஜி.ஆர். மகன்’, அருள்நிதி, ஜீவா கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘களத்தில் சந்திப்போம்’, சந்தோஷ் பி ஜெயக்குமாரின் ‘இரண்டாம் குத்து’ஆகிய 3 படங்கள் தீபாவளி ரிலீசை உறுதி செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.