தீவிரவாதம் மற்றும் போதைப்பொருள் தடுக்க அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி, மார்ச் 13- தீவிரவாதம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 30 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.போதைப் பொருள் கடத்தல் மன்னன் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் என்ஐஏ வழக்கு பதிவு செய்தது. நாடு முழுவதுவம் பல்வேறு மாநிலங்களில் இந்த கும்பல் செயல்பட்டு வருவதும் பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா மற்றும் பிரதீப் குமார் போன்ற மத மற்றும் சமூக தலைவர்களின் கொலைகள் உட்பட பல்வேறு கொடூர குற்றங்களில் இந்த கும்பல் ஈடுபட்டு வருவதும் விசாரணையில் தெரியவந்தது. தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலிலும் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.இவர்களின் பல்வேறு சதிச் செயல்கள் பாகிஸ்தான், கனடா போன்ற வெளிநாடுகளில் இருந்தும்அல்லது இந்திய சிறைகளில் உள்ள தீவிரவாத கும்பல்களின் தலைவர்களாலும் திட்டமிடப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.தீவிரவாதிகள், குண்டர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் இந்த கூட்டு சதித்திட்டங்களை தகர்க்கும் முயற்சியாக பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் சண்டிகரில் 30 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். மாநில போலீஸாருடன் இணைந்து நேற்று காலை முதல் இந்த சோதனை நடபெற்றது.வழக்கில் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அதிகாரிகள் இந்த சோதனை நடத்தினர். இந்த சோதனையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர்களின் 3 அசையா சொத்துகள் மற்றும் ஒரு அசையும் சொத்தை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இந்த சொத்துகள் தீவிரவாதத்தால் ஈட்டிய வருவாயில் வாங்கப்பட்டதும், தொடர்ந்து தீவிரவாத செயல்களுக்கு இவைபயன்படுத்தப்பட்டு வருவதும் தெரியவந்ததால் இவை முடக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.