தீவிரவாதிகள் தாக்குதல்: 5 போலீசார் பலி

பெஷாவர்:டிச.16- பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவின் டேங்க் மாவட்டத்தில் உள்ள போலீஸ் தலைமையகம் மற்றும் சோதனை சாவடியின் மீது நேற்று தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயிலில், உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்து தீவிரவாதி ஒருவன் தற்கொலைபடை தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலில் 3 போலீசார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
தொடர்ந்து போலீசார் மற்றும் தீவிரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்த பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து நல்லா பாரா சோதனை சாவடியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் பலியானார்கள். மேலும் 6 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு அன்சாருல் ஜிஹாத் என்ற புதிய தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.