தீவிரவாதிகள் தாக்குதல் 70 பேர் பலி

மாஸ்கோ, மார்ச் 23: மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியில் உள்ள குரோகஸ் சிட்டி ஹாலில் நடந்த இசை நிகழ்ச்சியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 70 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிக் ஸ்டேட் (ஐஎஸ்) என்ற குழு பொறுப்பேற்றுள்ளது. சமீப ஆண்டுகளில் ரஷ்யாவில் நடந்த மிக மோசமான தீவிரவாத தாக்குதல் இது என்று கூறப்படுகிறது.ரஷ்யாவில் மக்கள் அதிக அளவில் கூடும் இடத்தில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும், இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் ஒரு மாதத்திற்கு முன்பே அமெரிக்கா ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. சம்பவத்தில் 4 பயங்கரவாதிகள் தானியங்கி துப்பாக்கிகளில் சுட்டனர். அப்போது பொதுமக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வெவ்வேறு திசைகளை நோக்கி ஓடினர். ஒரு செய்தி சேனல் ஒளிபரப்பிய வீடியோ காட்சியில், தப்பி ஓடிய பொதுமக்களை கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் காட்டுகிறது. இச்சம்பவத்தில் காயமடைந்த 115க்கும் மேற்பட்டவர்களில் 60 பொதுமக்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆதாரங்களின்படி, 5 பேர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தற்போது தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் தப்பிச் சென்றுள்ள நிலையில் ரஷ்ய பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் இந்த தாக்குதலை “பெரிய சோகம்” என்று அழைத்தார். மேலும் சம்பவ இடத்திற்கு 50 ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டது.

தாக்குதலுக்கு ஐஎஸ் பொறுப்பு: குரோகஸ் சிட்டி ஹாலில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இஸ்லாமிக் ஸ்டேட் (ஐஎஸ்) பொறுப்பேற்றுள்ளது. எங்கள் போராளிகள் பெரிய அளவிலான விழாவைத் தாக்கியதாகவும், இப்போது பாதுகாப்பாக தங்கள் தளங்களுக்குத் திரும்பியுள்ளதாகவும் ஐஎஸ். தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதிகள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களைத் தேடும் பணியில் ரஷ்ய பாதுகாப்புப் படையினர் தொடர்ந்தனர். உருமறைப்பு உடையணிந்து ராட்சத கட்டிடத்திற்குள் நுழைந்த தீவிரவாதிகள் கையெறி குண்டுகள், வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளை சரமாரியாக அவிழ்த்துவிட்டனர். தாக்குதலின் விளைவாக, ஆரம்ப கட்டத்தில் கட்டிடத்தின் கூரையில் தீ விபத்து ஏற்பட்டது. மேலும் மூன்று ஹெலிகாப்டர்கள் மூலம் தீ அணைக்கப்பட்டது. இந்த தாக்குதலில் உக்ரைன் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று பதிலளித்துள்ளது.

பயங்கரமான தாக்குதல்: மோடி கண்டனம்: குரோகஸ் சிட்டி ஹாலில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் (EU), பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி உள்ளிட்ட உலக அளவில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பயங்கரவாதிகளின் கொடூர செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸில் கருத்து தெரிவித்த மோடி, “மாஸ்கோவில் நடந்த கொடூரமான தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். எங்களின் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன. இந்த துயரமான நேரத்தில், ரஷ்ய கூட்டமைப்பின் அரசு மற்றும் மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன: இந்த சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களையும் அதிபர் விளாடிமிர் புடினுக்கு அளித்து வருகிறோம் என புட்டினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவத்தால் தலைநகரில் வார இறுதியில் நடைபெறவிருந்த அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார். மேலும், நாடு முழுவதும் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.