தீவிரவாத சதி திட்டம்

புதுடெல்லி:நவம்பர். 12 – இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக 5 பேர் மீது என்ஐஏ குற்றபத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
குஜராத்தில் சட்டவிரோதமாக ஊடுருவியதாக வங்கதேசத்தைச் சேர்ந்த 4 பேர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டனர். போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி வங்கதேச எல்லை வழியாக ஊடுருவியது தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த 4 பேருக்கும் அல்-காய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதும், அந்த அமைப்புக்கு ஆள் சேர்த்தல் மற்றும் நிதி திரட்டுதல் உள்ளிட்ட செயலில் ஈடுபட்டதும் என்ஐஏ விசாரணையில் தெரிய வந்தது.
வெளிநாட்டினர்: இந்நிலையில், என்ஐஏ அதிகாரிகள் இந்த 4 வெளிநாட்டினர் உட்பட 5 பேர் மீது நேற்று முன்தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், இவர்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.மேலும் இவர்கள் வங்கதேச எல்லையில் இருந்து செயல்படும் அல்-காய்தா அமைப்பினரின் கட்டளைப்படி செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.