தீ விபத்தில் 4 குழந்தைகள் சாவு தலா ரூ 4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

போபால், நவ. 9- மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் குழந்தைகள் வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் போபாலில் உள்ள கமலா நேரு மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் திங்கட்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப்படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். உள்ளே நிறைய வேதிப்பொருட்கள் இருந்த காரணத்தால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் சில குழந்தைகளுக்கு தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனை தீ விபத்தில் சிக்கிய 40 குழந்தைகளில் 36 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதில் 4 பெண்களும் தீ காரணமாக காயம் அடைந்துள்ளனர். சிலிண்டர் வெடித்ததே தீ விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது. குழந்தைகள் மரணம் குறித்து முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் பெற்றோருக்கு தலா 4 லட்சம் ரூபாய் கருணை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டு தனி விசாரணை கமிட்டி அமைத்துள்ளார்.