தீ விபத்து: பிஎம்டபிள்யூ கார், பைக்குகள் எரிந்து நாசம்

பெங்களூர், ஏப். 24: நகரின் எலக்ட்ரானிக் சிட்டி, சிங்கசந்திரா, மணிப்பால் கண்ட்ரி சாலையில் உள்ள மரக்கடையில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. மரக்கட்டைகள் வைக்கப்பட்டிருந்த மரக்கடையில் ஏற்பட்ட தீ, அதன் பக்கத்திலிருந்த கார் கழுவும் மையத்தின் மீதும் பரவியது. பின்னர், அருகில் இருந்த தனியாருக்கு சொந்தமான ஆடைத் தொழிற்சாலையும் பரவியது.
தீப் புகை வெளியேறியதைக் கண்டு 6 தீயணைப்பு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான ஆடைகள் எரிந்து நாசமானது.
வாகன கழுவும் மையத்தில் இருந்த 40க்கும் மேற்பட்ட பைக்குகள் மற்றும் பிஎம்டபிள்யூ கார் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.