தீ விபத்து11 பேர் உடல் கருகி பலி

புதுடெல்லி: பி ப். 16: டெல்லியில் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி அலிபூர் மார்க்கெட்டில் தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த பெயிண்ட் தொழிற்சாலையில் நேற்று மாலை சுமார் 5.15 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.தொழிற்சாலையில் ரசாயனங்கள் அதிகளவு இருந்ததால் மளமளவென பற்றி எறிந்த தீ மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. மேலும் அங்கிருந்த பொருட்கள் வெடித்து சிதறியதுடன் அடர்த்தியான கரும்புகையுடன் தீப்பிழம்பாக காட்சியளித்தது. இதையடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு தீயை அணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
6 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் முதலில் வரவழைக்கப்பட்ட நிலையில், தீயின் வேகம் அதிகரித்ததால் கூடுதலாக 14 தீயணைப்பு வாகனங்கள் வரவைழக்கப்பட்டன. தண்ணீரை பீய்ச்சி அடித்து வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.சுமார் 4.5 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலரை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. தீ விபத்து எப்படி நடந்து என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.