துபாய்க்கு சொகுசு கப்பல்

பேப்பூர்-கொச்சி, டிச. 22- துபாய் உல்லாச கப்பல் சேவைக்கு கேரள அரசு தற்போது பச்சை கொடி காட்டியுள்ளது. கேரள அரசின் அனுமதியை தொடர்ந்து, பேப்பூர்-கொச்சி-துபாய் உல்லாச கப்பல் சேவை வெகு விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இது சுற்றுலா துறையை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்தியாவில் இருந்து துபாய் செல்பவர்களுக்கும், இந்த உல்லாச கப்பல் சேவை பெரிதும் பயன் அளிக்கும். இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. விமான டிக்கெட் கட்டணத்துடன் ஒப்பிடும்போது, இந்த உல்லாச கப்பல் சேவைக்கான டிக்கெட் கட்டணம் மிகவும் குறைவாக இருக்கும் என்பதுதான். விமான டிக்கெட் கட்டணத்தில் பாதிதான், இந்த உல்லாச கப்பலின் டிக்கெட் கட்டணமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உதாரணத்திற்கு விமான டிக்கெட் கட்டணம் 15 ஆயிரம் ரூபாய் என்றால், இந்த உல்லாச கப்பலின் டிக்கெட் கட்டணம் வெறும் 7,500 ரூபாயாக மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உல்லாச கப்பலில் ஒரே நேரத்தில் சுமார் 1,250 பயணிகள் பயணம் செய்ய முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உல்லாச கப்பலில் பல்வேறு அதிநவீன வசதிகள் இடம்பெற்றிருக்கும். எனவே பயணிகள் பாதுகாப்பான மற்றும் சௌகரியமான கடல் பயணத்தை ‘என்ஜாய்’ செய்ய முடியும். இந்தியாவில் இருந்து, குறிப்பாக கேரளாவில் இருந்து, துபாய் உள்பட ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நிறைய பேர் சென்று வருகின்றனர். ஆனால் விமான டிக்கெட் கட்டணம் அதிகமாக இருப்பது, அவர்களுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இதை மனதில் வைத்துதான், இந்த உல்லாச கப்பல் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.