துபாய்-க்கு பளபளன்னு புதிய விமான நிலையம்

துபாய், ஏப். 29- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பகுதியில் முக்கிய நகரமான துபாய், உலக வர்த்தகத்திலும், சுற்றுலாவிலும் முன்னிலை வகிக்கிறது என்பதை மீண்டும் உலகிற்கு உணர்த்தும் வகையில், மிகப்பெரிய திட்டத்தை அறிவித்துள்ளது. துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம், ஞாயிற்றுக்கிழமை தனது எக்ஸ் பதிவில், அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனையம் கட்டமைக்க 128 பில்லியன் திர்ஹம் அதாவது 2.9 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்த புதிய பணிகள் முனையம், துபாய் சர்வதேச விமான நிலையத்தை விட ஐந்து மடங்கு பெரியதாகவும், பயணிகளை கையாளும் திறன் கொண்டதாகவும் இருக்கும் எனவும் துபாய் மன்னர் அறிவித்தார். இந்த புதிய விமான நிலையம், 26 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும் என்று கூறி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். மேலும்,
வரும் ஆண்டுகளில் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து செயல்பாடுகளும் அல் மக்தூம் விமான நிலையத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் கூறினார். புதிய அல் மக்தூம் விமான நிலையத்தில் 400 டெர்மினல் கேட்கள் மற்றும் ஐந்து ஓடுதளங்கள் உடன் இருக்கும் என்று ஷேக் முகமது தெரிவித்தார். மேலும், துபாயின் முதன்மை விமான நிறுவனமான எமிரேட்ஸ் மற்றும் அதன் கிளை நிறுவனமான ஃப்ளை துபாய் ஆகியவை இந்த புதிய விமான நிலையத்தை தங்கள் மையமாகக் கொள்ளும். உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் துபாயுடன் இணைவதற்கான புதிய மையமாகவும் இது இருக்கும் என்று துபாய் அரசின் எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் தலைவர் ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் தெரிவித்தார். துபாய் விமான நிலையங்களின் தலைமை நிர்வாக அதிகாரி பவுல் கிரிஃபித்ஸ் கூறுகையில், இந்த நடவடிக்கை “உலக விமான போக்குவரத்து மையமாகத் துபாயின் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது” என்று துபாய் அரசு ஊடக அலுவலகம் மூலம் தெரிவித்துள்ளார். துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் கூறுகையில், “எதிர்கால சந்ததியினருக்காக புதிய திட்டம் ஒன்றைக் கட்டமைத்து வருகிறோம். நம் குழந்தைகளுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் இந்த திட்டம் மூலம் தொடர்ச்சியான மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்கிறோம்” என்று தெரிவித்தார்.