துப்பாக்கிச்சூட்டில் காவலர் உட்பட 6 பேர் உயிரிழப்பு

குவாஹாட்டி, நவ.23-
அசாம் போலீஸார், மேகாலயா மக்கள் இடையே நேற்று மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில்அசாம் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். கலவரத்தில் அசாம் வனத்துறை காவலர் உயிரிழந்தார்.கடந்த 1972-ம் ஆண்டு அசாம் மாநிலத்தில் இருந்து மேகாலயா மாநிலம் உதயமானது. அப்போது முதல் இரு மாநிலங்களுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. மத்திய அரசின்சமரசத்தால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இரு மாநில அரசுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த சூழலில் நேற்று அதிகாலையில் மேகாலயா, அசாம் எல்லையில் முக்ரோ கிராமம் வழியாக கடந்த செல்ல முயன்ற ஒரு லாரியை அசாம் போலீஸாரும் வனத்துறை அலுவலர்களும் தடுத்து நிறுத்தினர். அசாம் வனப்பகுதியில் இருந்து மரங்களை வெட்டி கடத்திவருவதாக போலீஸார் குற்றம் சாட்டினர். அப்போது இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
போலீஸாரின் எச்சரிக்கையை மீறி அங்கிருந்து லாரி புறப்பட்டது. அப்போது போலீஸார், லாரியின் டயரை துப்பாக்கியால் சுட்டு பஞ்சராக்கினர்.
சில தொழிலாளர்களை பிடித்தனர். மற்றவர்கள் தப்பியோடிவிட்டனர்.இதுகுறித்து தகவலறிந்த மேகாலயா எல்லையோர கிராமங்களை சேர்ந்த மக்கள் கம்பு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அசாம் போலீஸார் பிடித்துவைத்திருந்த தொழிலாளர்களையும் லாரியையும் விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அசாம் போலீஸார் மறுப்பு தெரிவிக்கவே, இருதரப்புக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.