துப்பாக்கிச் சுடுதலில் 2 தங்கம், 2 வெள்ளி வென்ற இந்தியா

ஹாங்சோ: செப்.29- ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் குழுப் பிரிவில் தங்கம், மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழுப் பிரிவில் வெள்ளி, மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளி வென்றுள்ளனர் இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணியை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள்.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை (செப்.20) அன்று பதக்கத்தின் கணக்கை கூட்டியுள்ளது. துப்பாக்கிச் சுடுதல், ஆடவர் இரட்டையர் டென்னிஸில் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் குழு: இந்த பிரிவில் 1769 புள்ளிகளை பெற்று புதிய உலக சாதனை படைத்துள்ளது ஐஸ்வர் பிரதாப் சிங் தோமர், ஸ்வப்னில் மற்றும் அகில் ஷியோரன் ஆகியோர் அடங்கிய இந்திய குழு. இரண்டாம் இடத்தில் சீனாவும், மூன்றாம் இடத்தை கொரியாவும் பிடித்தன.
மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழு: 1731 புள்ளிகளுடன் இந்தப் பிரிவில் வெள்ளி வென்றுள்ளது இந்தியா. ஈஷா சிங், பாலக் மற்றும் திவ்யா ஆகியோர் இதில் இந்தியா சார்பில் பங்கேற்றிருந்தனர். முதல் இடத்தை சீனா பிடித்தது.
மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர்: இந்த பிரிவில் இந்தியாவின் பாலக் தங்கமும், ஈஷா சிங் வெள்ளியும் வென்றனர். இதே போல ஆடவர் இரட்டையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் மற்றும் சாகேத் ஆகியோர் வெள்ளி வென்றனர். ஸ்குவாஷ் மகளிர் டீமில் இந்தியா வெண்கலம் வென்றுள்ளது.