துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி; 2 பேர் காயம்

வாஷிங்டன் : ஜூலை 18
அமெரிக்காவில் பல்பொருள் அங்காடி ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். இன்டியானா மாகாணத்தில் இருக்கும் க்ரீன்வுட் நகரத்தில் உள்ள பார்க் ஹால் என்ற பல்பொருள் அங்காடி ஒன்றில் நேற்று மாலை மர்ம நபர் ஒருவர் நுழைந்தார். சிறிது நேரம் அங்காடியை நோட்டமிட்ட அவர், திடீரென்று மறைத்து வைத்து இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து உணவகம் ஒன்றில் அமர்ந்து இருந்த வாடிக்கையாளர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். குண்டு காயம் அடைந்த பலர் தரையில் விழுந்தனர்.
துப்பாக்கிச் சூடு பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்காடிக்குள் அதிரடியாக நுழைந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பே ஆயுதம் வைத்து இருந்த பொதுமக்கள் சிலர் மர்ம நபரை சுட்டுக் கொன்றனர். அங்காடியில் இருந்து படுகாயங்களுடன் 5 பேரை மீட்ட இன்டியானா காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் குறித்து விசாரித்து வரும் காவல்துறையினர் கொலையாளியின் புகைப்படத்தை வைத்து அவரை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவில் ஆயுத தடைச் சட்டத்தை கடுமையாக்க ஜோபிடன் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், துப்பாக்கிச் சூடு நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.