துப்பாக்கியால் சுட்டு ஒருவர் தற்கொலை – அரவிந் லிம்பாவலி மீது எப்ஐஆர்

பெங்களூர் : ஜன.2-
காரில் தலையில் சுட்டுக்கொண்டு பெல்லந்தூரின் அம்பலிபுரா பகுதியில் வசித்து வந்த பிரதீப் என்பவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக எம் எல் ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் அரவிந்த் லிம்பாவலிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவாகியுள்ளது. பி ஜே பியின் முக்கிய பிரமுகராகவுமுள்ள அரவிந்த் லிம்பாவளி உட்பட ஆறு பேர்களின் பெயர்களை எழுதிவைத்து விட்டு பிரதீப் (47) நேற்று மாலை காரில் துப்பாக்கியால் சுட்டு கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவல் அறிந்த உடனேயே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸ் அதிகாரிகள் பரிசீலனை நடத்தி வழக்கை மிக தீவிரமாக ஆய்வு செய்யுமாறு தெரிவித்துள்ளனர். தவிர புலனாய்வு துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து பரிசோதனைகள் நடத்தியுள்ளனர். பிரதீப் குடும்பத்தாருடன் இரண்டு நாட்களுக்கு முன்னர் நெட்டெகெரேவில் உள்ள வுட்ஸ் ரிசார்டிற்கு புத்தாண்டு கொண்டாட வந்து டிசம்பர் 31 அன்று இரவு மனைவியுடன் சண்டை போட்டுகொண்டு வீட்டுக்கு சென்று மீண்டும் மறுநாள் காலை ரிசார்ட் வந்துள்ளார். மாலை ஐந்து மணிக்கு மனைவி முன்னால் காரில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் இருந்த காரில் பிரதீப் தன்னை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சத்தம் கேட்டு திரும்பிவந்த மனைவிக்கு இந்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது. தற்கொலை செய்துகொள்ளும் முன்னர் பிரதீப் எம் எல் ஏ அரவிந்த் லிம்பாவலி , கோபி கே சோமய்யா , ஜி ரமேஷ் ரெட்டி , ராகவ் பட் ஆகியோரின் பெயர்களை தன்னுடைய மரண வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார். எட்டு பக்கங்கள் கொண்ட மரண வாக்கு மூலத்தில் ஹெச் எஸ் ஆர் லே அவுட் அருகில் உள்ள ஹரளூரில் க்ளப் திறக்கும் நோக்கில் கே கோபி மற்றும் சோமய்யா ஆகியோரிடம் 2018ல் ஆலோசனை நடத்தி ரிஸார்ட்டை துவங்க இருவரும் ஒப்புக்கொண்டு ஒவ்வொரு மாதமும் மூன்று லட்ச ரூபாய் லாபம் மற்றும் அங்கேயே வேலையில் இருந்தால் மாதத்திற்கு ஒன்றரை லட்ச ரூபாய் கொடுப்பபதாகவும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர் . இதற்க்கு ஒப்புக்கொண்டு 2018 மே மாதத்திலிருந்து டிசம்பர் வரை ஒரு கோடி மற்றும் 10 லட்சம் ரூபாய் வங்கியில் முதலீடு செய்துள்ளதாக பிரதீப் தன் மரண வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.