துப்பாக்கி தடுக்க முடியாமல் திணறும் அமெரிக்கா

வாஷிங்டன், ஆக. 30- அமெரிக்காவில் ஒரேநாளில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிசூடுகளில் 12 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதிபர் ஜோ பைடன் அரசு ஆயுத கலாச்சாரத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்தி வந்தாலும் அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. டெக்ஸாஸ் மாகாணம், பூஸ்டனில் வீடு ஒன்றுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். அப்போது வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தவர்களை கண்மூடி தனமாக சுட்டனர். இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். அடுத்த சில மணி நேரத்தில் டெக்ஸாஸ் மாகாணத்தில் போர்ட்வெர்ட் நகரத்தில் காரில் வந்த மர்மநபர், வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த சிறுவர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.
இதில் 17 வயது சிறுவனும், 5 வயது குழந்தையும் பலியாகினர். மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய் நகரில், மர்ம நபர் நகரின் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டார். இதில் 40 வயது பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 4வது துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒரேகான் மாகாணத்தில் நடந்தது. பெண்ட் நகரில் உள்ள சூப்பர் மார்கெட்டுக்குள் நுழைந்த மர்ம நபர், பொருட்களை வாங்கி கொண்டிருந்தவர்களை சரமாரியாக சுட்டார். இதில் இருவர் பலியாகினர்.
பின்னர் மர்ம நபர், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். ஒரேநாளில் 4 இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 12 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் ஜனவரி முதல் தற்போது வரை 350க்கும் அதிகமான முறை துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.