தூக்க மாத்திரைகளால் கருச்சிதைவு ஆபத்து

புதுடெல்லி: டிச. 30: கர்ப்ப காலத்தில் பெண்கள் பதட்டம் மற்றும் தூக்கமின்மையை குணப்படுத்த பயன்படுத்தும் பென்சோடியாசெபைன் மாத்திரை காரணமாக கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளனர். பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது பதட்டம் மற்றும் தூக்கமின்மை பிரச்னைகளுக்காக பென்சோடியாசெபைன் மாத்திரையை பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். தைவான் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பென்சோடியாசெபைன் மாத்திரை பயன்படுத்துவதற்கும் கருச்சிதைவுக்கும் உள்ள தொடர்பு குறித்த ஆய்வை மேற்கொண்டனர்.
2004ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கருச்சிதைவு ஏற்பட்ட கர்ப்பங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன. சுமார் 30,67,122 கருவுற்ற பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 4.4 சதவீதம் அளவுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. கருச்சிதைவு என்பது பொதுவாக 8 வாரங்கள் முதல் 19வது வாரத்திற்கு இடையே ஏற்படும் கரு இழப்பாகும்.
பென்சோடியாசெபைன் மாத்திரைகளை பயன்படுத்துவதால் கருச்சிதைவு ஏற்படுவதற்கான அதிக அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே கர்ப்ப காலத்தில் மனநோய் மற்றும் தூக்க பிரச்னைகளுக்கு சிகிச்சயளிப்பதற்கு பென்சோடியாசெபைன் பயன்படுத்த பரிந்துரைக்கும்போது கருச்சிதைவு ஆபத்து குறித்தும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.