தெண்டுல்கரின் ஐ.பி.எல். அணியில் ரோகித், கோலிக்கு இடமில்லை

மும்பை, மே 31- கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கர் சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியின் அடிப்படையில் 11 வீரர்களை தேர்வு செய்து உள்ளார்.

சச்சின் தெண்டுல்கர் தேர்வு செய்த ஐ.பி.எல். லெவனில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட்கோலி ஆகியோருக்கு இடமில்லை. இருவரது ஆட்டமும் இந்த ஐ.பி.எல். போட்டியில் மோசமாக இருந்ததால் அவர்களை தேர்வு செய்யவில்லை.

விராட்கோலி 341 ரன் எடுத்து இருந்தார். சராசரி 22.73 ஆகும். ரோகித் சர்மாவின் சராசரி 19.14 ஆக இருந்தது. அவர் 14 ஆட்டத்தில் மொத்தம் 268 ரன்களே எடுத்தார்.

ஐ.பி.எல். கோப்பையை வென்ற குஜராத் டைடன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெண்டுல்கர் அணிக்கு தேர்வு செய்த லெவனுக்கு கேப்டனாக உள்ளார்.

ஜஸ்பட்லர், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாகவும், 3-வது வரிசைக்கு லோகேஷ் ராகுலையும் அவர் தேர்வு செய்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக்குக்கு இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது. வெஸ்ட்இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாட்டு வீரர்களுக்கு அவரது அணியில் இடமில்லை.