தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கொரோனாவால் பாதிப்பு

இங்கிலாந்து தொடருக்கான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த வீரர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்
மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளது. இவ்விரு அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 27-ந்தேதி கேப்டவுனில் நடக்கிறது. இங்கிலாந்து வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
இந்த நிலையில் இந்த போட்டிக்கு தயாராகும் தென்ஆப்பிரிக்க வீரர்கள் மற்றும் பயிற்சி உதவியாளர்கள் கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் இணைவதற்கு முன்பாக கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். கிட்டத்தட்ட 50 சோதனை எடுக்கப்பட்டது. இதில் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. அவரும், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மேலும் இரு வீரர்களும் உடனடியாக கேப்டவுனில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஆனால் 3 வீரர்களுக்கும் எந்த அறிகுறியும் தென்படவில்லை. இருப்பினும் அவர்களை டாக்டர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதனால் அவர்கள் தொடக்க ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.
இப்போதைக்கு அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் அழைக்கப்படவில்லை. ஆனால் தென்ஆப்பிரிக்க அணி வீரர்களுக்குள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவதற்கு வசதியாக இரண்டு வீரர்கள் சேர்க்கப்படுவதாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மார்ச் மாதத்துக்கு பிறகு முதல்முறையாக சர்வதேச போட்டிகளில் அடியெடுத்து வைக்கும் தென்ஆப்பிரிக்க வீரர்கள் இங்கிலாந்து தொடரின் போது கருப்பின வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக களத்தில் முழங்காலிடும் பிரசாரத்தை மேற்கொள்ளமாட்டார்கள் என்று தென்ஆப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 3டி வகை கிரிக்கெட்டின் போது தென்ஆப்பிரிக்க வீரர்கள் மைதானத்தில் முட்டிப்போட்டு ‘கருப்பின மக்களின் வாழ்க்கை முக்கியம்’ இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்ததை சுட்டிகாட்டிய பவுச்சர், அனேகமாக கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாட வாய்ப்புஇருப்பதாக கூறினார்.