தென்னிந்தியா முழுவதும் அதிகரிக்கும் வெயில் – வானிலை மையம்

சென்னை: மார்ச் 30: தமிழ்நாடு மட்டுமல்லாது தென்னிந்தியாவின் மேலும் 3 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த ஆண்டும் தென்னிந்தியாவில் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் நீர் நிலைகள் வேகமாக வறண்டு வருகின்றன. இதனால் வன விலங்குகள் மட்டுமின்றி மக்களும் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தென்னிந்தியாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கடலோர ஆந்திரா மற்றும் கடலோர ஒடிசாவில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் தீவிரமாக இருக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. கேரளாவை பொறுத்த அளவில் கடந்த ஆண்டு பருவமழை போதுமான அளவு பெய்யாததால் அணையில் இருந்த நீர் மட்டம் வேகமாக குறைந்தது. எனவே மின்சார உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது வெயில் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளதால், அணையில் உள்ள மீன் வளத்திற்கு தேவையான நீர் கூட விரைவில் வற்றிவிடும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தை பொறுத்த அளவில், தென் மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளில் நீர் இருந்தாலும், சில முக்கியமான நீர் நிலையில் நீர் போதுமான அளவு இல்லை. குறிப்பாக டெல்லா மாவட்டங்களுக்கு உயிர் கொடுக்கும் மேட்டூர் அணையில் போதுமான அளவு நீர் இல்லை. இந்நிலையில் வெயில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டிருப்பதால் இருக்கும் கொஞ்சம் நீரும் விரைவில் வறண்டு விடும் என்று அஞ்சப்படுகிறது. இதே நிலைமைதான் ஆந்திர, ஒடிசாவிலும் இருக்கிறது. எனவே அடுத்த சில மாதங்களுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியமான பிரச்னையாக இருக்கிறது.