தென்பெண்ணையாறு அவலம்

அரூர்: நவ.2- தென்பெண்ணையாற்றில் நாளுக்கு நாள் குறைந்து வரும் நீர் வரத்தின் காரணமாக இவ்வாண்டு முழுமையாக வறண்டு போகும் அபாயத்தில் உள்ளது.கடந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கெலவரப் பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணை ஆகியவை முழுமையாக நிரம்பின. இதனால் கடந்த ஆண்டில் கிருஷ்ணகிரி அணையில் இருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டது, க டந்த ஆகஸ்ட், செப்டெம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இருபுறமும் கரைகளை தொட்டவாறு ஆர்ப்பரித்து வெள்ள நீர் சென்றது.
இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் தென்பெண்ணையாற்றுக் கரையோரம் உள்ள மக்களுக்கு பலமுறை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு இல்லாத நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து போதிய நீர் வரத்து கிருஷ்ணகிரி அணைக்கு வரவில்லை.
இதன் காரணமாக ஆற்றில் நீர் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து என்பது வெகுவாக குறைந்துள்ளது. நாளுக்கு நாள் ஆற்றுப் பகுதியில் சிற்றோடைகளில் ஒடுவது போல் நீர் செல்வதை காண முடிகிறது. இதே நிலை தொடருமாயின் வற்றாத தென்பெண்ணையாறு முழுமையாக வறண்டு போகும் நிலைக்கு வாய்ப்புள்ளது.
வடகிழக்கு பருவ மழையும் போதிய அளவிற்கு தொடங்கப்படாமல் உள்ள நிலையில் இவ்வாண்டு விவசாயத்திற்கு மட்டுமின்றி குடிநீருக்கும் அவதிப்படும் நிலை வரும் என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.