தென் ஆப்பிரிக்க டெஸ்ட்; டோனியின் சாதனையை முறியடித்த ரிஷாப் பண்ட்

செஞ்சூரியன், டிச. 29- தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படும் இந்த டெஸ்டில் இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று முன்தினம் 2-வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீச முடியாமல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
நேற்று நடந்த 3-ஆம் நாள் ஆட்டதில் இந்திய அணி 105.3 ஓவர்களில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதை தொடர்ந்து தங்கள் முதல் இன்னிங்க்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 62.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.130 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸ்சை ஆடிய இந்திய அணி 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்து வலுவான முன்னிலையில் உள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட், முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்காவின் 4 வீரர்களை கேட்ச் செய்தார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 93 கேட்ச், 8 ஸ்டம்பிங் என்று மொத்தம் 101 பேரை விக்கெட் கீப்பிங் மூலம் ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார். ‘கீப்பிங்கில் 100 அவுட்’ என்ற மைல்கல்லை வேகமாக எட்டிய இந்திய விக்கெட் கீப்பர் (26 டெஸ்ட்) என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பு டோனி, விருத்திமான் சஹா தங்களது 36-வது டெஸ்டில் இந்த இலக்கை எட்டியதே இந்திய விக்கெட் கீப்பரின் அதிவேகமாக இருந்தது.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் அவர் தனது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கையை 200 ஆக (55 டெஸ்ட்) உயர்த்தினார். இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் கபில்தேவ், ஜாகீர்கான், இஷாந்த் ஷர்மா, ஜவஹல் ஸ்ரீநாத் ஆகியோருக்கு பிறகு 200 விக்கெட் வீழ்த்திய வீரராக ஷமி திகழ்கிறார்.