தெலங்கானாவில் 100 தொகுதிகளுக்கு மேல் பிஆர்எஸ் வெற்றி பெறும்

ஹைதராபாத், ஆக. 30- தெலங்கானாவில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 100 தொகுதிகளுக்கும் மேல் பிஆர்எஸ் கட்சி அமோக வெற்றி பெற்று தொடர்ச்சியாக 3-வது முறையும் ஆட்சி அமைக்கும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், எம்எல்சியுமான கவிதா நம்பிக்கை தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம், ஆர்மூர் சட்டமன்ற பிஆர்எஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜீவன் ரெட்டிக்கு ஆதரவாக, எம்.எல்.சி கவிதா நேற்று அப்பகுதியில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: காங்கிரஸ், பாஜகவினர் முதல்வர் சந்திரசேகர ராவ் மீது வீண் பொய்களை அள்ளி வீசி வருகின்றனர்.
விவசாயத்திற்கு 3 மணி நேர இலவச மின்சாரம் வழங்குவோம் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. ஆனால் கேசிஆர் 24 மணி நேரம் மின்சாரம் வழங்கி வருகிறார். பாஜகவோ விவசாய மோட்டார்களுக்கு மீட்டர் பொருத்தி விடும் ஜாக்கிரதை. பாஜக கார்ப்பரேட் ஆட்களின் கடனை தள்ளுபடி செய்கிறதே தவிர, விவசாயிகளுக்கென ஏதும் இதுவரை செய்ய வில்லை. எங்களின் முதல்வர் வேட்பாளர் கே. சந்திரசேகர ராவ். ஆனால், காங்கிரஸ், அல்லது பாஜகவின் முதல்வர் வேட்பாளர் இவர்தான் என யாரையாவது அவர்கள் கூற முடியுமா? ஆர்மூர் பிஆர் எஸ் வேட்பாளர் ஜீவன் ரெட்டியை சுமார் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இம்முறை 119 தொகுதிகளில், 100 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று,3-வது முறையாக சந்திரசேகர ராவ் ஆட்சி அமைப்பார் என கவிதா பேசினார்.