தெலுங்கானாவில் தீ விபத்து- இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம்

புதுடெல்லி ,செப்.13- தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் நகரில் உள்ள மின்சார ஸ்கூட்டர் விற்பனை நிலையத்தில் வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் பகுதியில் நேற்றிரவு தீ பிடித்தது. இந்த தீ அருகில் இருந்த 4 மாடிகள் கொண்ட தங்கும் விடுதிக்கும் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த விடுதியில் இருந்த 40 பேரை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடும் புகை மூட்டம் காரணமாக அந்த விடுதியின் முதல் 2 தளங்களில் தங்கியிருந்த சென்னையை சேர்ந்த நபர் உள்பட 8 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். பலர் விடுதியில் இருந்து கீழே குதித்தனர்.
இந்நிலையில், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இழப்பீடு அறிவித்துள்ளார்
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது.
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.