தெலுங்கு தேசம் வென்றால் மட்டுமே சட்டசபைக்கு வருவேன்

திருப்பதி,நவ. 18- ஆந்திர மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் விறுவிறுப்பாக தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கி உள்ளன. தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் ஜனசேனா கட்சித் தலைவர்கள் பொதுக்கூட்டம் நடைபயணம், ரோடு ஷோ நடத்தி வருகின்றனர். ஆந்திராவில் எதிர்க்கட்சியாக உள்ள சந்திரபாபு நாயுடு வரும் தேர்தலில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக மாநிலம் முழுவதும் ரோடு ஷோ நடத்தி வருகிறார். இதேபோல், அவரது மகன் நாரா லோகேஷ் வரும் ஜனவரி மாதம் முதல் ஆந்திரா முழுவதும் 400 நாட்கள் நடை பயணம் செல்ல பயணம் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் கர்னூலில் சந்திரபாபு நாயுடு திறந்தவேனில் ரோடு ஷோ நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: ஆந்திராவில் ஜெகன்மோகன் ஆட்சியில் அநியாயங்கள் பெருகிவிட்டன. மளிகை பொருட்கள், காய்கறிகள், பெட்ரோல் டீசல் விலை உயர்வு விண்ணைத் தொட்டுக் கொண்டுள்ளது. சாலைகள் குண்டும் குழியுமாக சீரமைக்கப்படாமல் உள்ளது. ரோடுகளை கூட சீரமைக்க முடியாத இவரால் எப்படி 3 தலைநகரங்களை அமைக்க முடியும். இவரது ஆட்சியில் ஏழைகள் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். என்னுடைய 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் என்னை அவமதிக்கவோ அல்லது அவமதிக்க யாரும் முயற்சி செய்யவில்லை. ஆனால் என்னையும் எனது மனைவி புவனேஸ்வரியும் ஜெகன்மோகன் ரெட்டி அவமதித்து பேசினார்.