சென்னை: ஜனவரி 26- நாடு முழுவதும் குடியரசு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, சென்னை மெரினா கடற்கரையில் தேசியக் கொடியை ஏற்றி அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் காலை 8 மண அளவில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. விழாவில் தேசியக் கொடியை ஏற்றுவதற்காக வருகை தந்த ஆளுநர் ஆர்.என். ரவியை, முதல்வர் மு.க. ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். விழாவில், அமைச்சர் துரைமுருகன், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, முப்படைகளின் உயர் அதிகாரிகள் ஆளுநருக்கு அறிமுகப்படுத்திவைக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் முன்னிலையில் மூவர்ணக்கொடியை ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்றினார். அப்போது ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பூ மழை தூவப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தினர்.
பின்னர் ஆளுநர் ஆர்.என் ரவி, முப்படையினர் உள்பட நாட்டின் பாதுகாப்புப் படையினரின் அணி வணக்க மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்திய விமானப்படை, கடற்படை, ராணுவ கூட்டுக்குழல் முரசு இசைப் பிரிவினர், கடலோர காவல்படை, ரயில்வே பாதுகாப்புப் படை, தமிழ்நாடு காவல்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் பெண் படை, தமிழ்நாடு ஆயுதப் படையினரின் பேரிடர் மீட்புப் படை, ஆந்திரப் பிரதேச ஆண்கள் சிறப்பு காவல்படை, தமிழ்நாடு கமாண்டோ படை, கடலோர காவல் பாதுகாப்புப் படை, குதிரைப் படை, வனத்துறை பிரிவினர், சிறைத்துறை பிரிவினர், தீ அணைப்பு மற்றும் மீட்புப் படை பிரிவினர், ஊர்க்காவல் ஆண்கள் படைப் பிரிவினர், பள்ளி மாணவர்களின் கூட்டுக்குழல் இசை அணிவகுப்பு உள்ளிட்டோர் கம்பீரமாக அணிவகுத்து வந்து ஆளுநருக்கு மரியாதை செலுத்தினர்.