தேசிய சின்னத்தில் ஆக்ரோஷமான சிங்கங்கள்: பழைய சிங்கம் போல் இல்லை; எதிர்க்கட்சிகள் கண்டனம்

புதுடெல்லி, ஜூலை 13- புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த தேசிய சின்னத்தில் ஆக்ரோஷமான சிங்கங்கள் இடம் பெற்றிருப்பதாகவும், இது தேசிய சின்னத்தையே சிதைப்பதாக இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. டெல்லியில் ரூ.1,250 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில், 9,500 கிலோ எடை கொண்ட 20 அடி உயர பிரமாண்ட வெண்கல தேசிய சின்னத்தை பிரதமர் மோடி நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், புதிய தேசிய சின்னத்தில் குறை இருப்பதாக நேற்று பல்வேறு கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தனது டிவிட்டரில், ‘மோடி அவர்களே, புதிய தேசிய சின்னத்தை உற்று பாருங்கள், அவை, அசோகரின் சாரநாத் தூணில் உள்ள சிங்கங்களை பிரதிபலிக்கிறதா அல்லது கிர் காடுகளின் சிங்கங்களை பிரதிபலிக்கிறதா? தேவைப்பட்டால் அதை சரி செய்யுங்கள்’ என கூறி உள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி ஜவகர் சித்தார்த் தனது டிவிட்டரில், ‘நமது தேசிய சின்னமான, கம்பீரமான அசோக சிங்கங்களுக்கு அவமானம் இழைத்து விட்டனர். அழகான, நம்பிக்கையான சிங்கங்களுக்கு பதிலாக, தேவையற்ற ஆக்ரோஷமான, ஏற்றத்தாழ்வான சிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது தேசிய சின்னத்தையே சிதைக்கிறது’ என தேசிய சின்னத்தை அசல் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
பிரபல வரலாற்று ஆசிரியர் இர்பான் ஹபீப் கூறுகையில், ‘நமது சிங்கங்கள் ஏன் மூர்க்கமாகவும், கோபம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்? இவை அசோகரின் சிங்கங்கள் அல்ல,’ என கூறி உள்ளார். மூத்த வக்கீலும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷண் கூறுகையில், ‘கோரைப் பற்களுடன் கோபமடைந்த சிங்கங்கள். இது மோடியின் புதிய இந்தியா,’ என விமர்சித்துள்ளார். பாஜ தலைமை செய்தித் தொடர்பாளர் அனில் பலூனி அளித்த பேட்டியில், ‘‘சாரநாத்தில் உள்ள அதே மாதிரியான தேசிய சின்னம்தான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. எதுவும் மாறவில்லை. 150 ஆண்டுக்கு முன் ஆங்கிலேயர்கள் உருவாக்கிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக, இந்தியா தனது சொந்த நாடாளுமன்ற கட்டிடம் பிரதமர் மோடி ஆட்சியில் கட்டப்படுகிறதே என்ற விரக்திதான் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ள உண்மையான காரணம். அரசியல் ஆதாயத்திற்காகாத்தான் அவர்கள் ஒரு பிரச்னைக்கு பிறகு இன்னொன்று என தொடர்ந்து பிரச்னையை கிளப்புகிறார்கள்,’’ என்றார்.