தேசிய வலுதூக்கும் போட்டி; பலம் காட்டிய கோவை வீரர்

கோவை : ஜூலை.28-
பெங்களூருவில் நடந்த தேசிய அளவிலான வலுதுாக்கும் போட்டியில் கோவை வீரர், மூன்று தங்கப்பதக்கங்கள் வென்று அசத்தினார். பெங்களூரு ‘புரோ லீக் நேஷனல் அசோசியேஷன்’ சார்பில், 2வது தேசிய அளவிலான வலுதுாக்கும் போட்டி, பெங்களூரு மொமன்ட் பிட்னஸ் மையத்தில் நடந்தது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு டீன்ஸ், ஜூனியர், ஓபன் மற்றும் மாஸ்டர்ஸ் ஆகிய வயது பிரிவுகள், 44 கிலோ முதல் 140+ வரை பல்வேறு எடை பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இப்போட்டியில், கோவை, போத்தனுார் ‘மிஸ்டர் பீம் பிட்னஸ்’ மையத்தில் பயிற்சி மேற்கொண்டு வரும் பத்மநாதன், 20 ஜூனியர், 125 கிலோ எடைக்குட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்றார்.
இவர் வலுதுாக்கும் போட்டியில், 580 கிலோ (பெஞ்ச் பிரஸ் 135 கிலோ, டெட் லிப்ட் 235 கிலோ மற்றும் ஸ்குவாட் 210 கிலோ) எடை துாக்கி ஒரு தங்கம்; பெஞ்ச் பிரஸ் தனிப்பிரிவில், 130 கிலோ துாக்கி ஒரு தங்கம்; டெட் லிப்ட் தனிப்பிரிவில், 240 கிலோ துாக்கி ஒரு தங்கம் என, மூன்று தங்கப்பதக்கங்கள் வென்று, சர்வதேச அளவில் நடக்கவுள்ள, வலுதுாக்கும் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.