தேஜஸ்வி யாதவ் வீட்டு முன்பு போலீஸ் குவிப்பு

பாட்னா: பிப். 12:
பீகார் தலைநகர் பாட்னாவில் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வீடு முன்பு ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். பீகார் மாநிலத்தில் 4 ஆண்டுகளில் 3வது முறையாக நிதிஷ்குமார் முதல்வராகி இருக்கிறார். பிகாரில் நிதிஷ்குமாரின் ஜேடியு மற்றும் பாஜக கூட்டணி அரசு இன்று பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளது. பிகார் சட்டப்பேரவையில் உள்ள எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 243, பெரும்பாண்மைக்கு 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
நிதிஷ்குமார் பாஜக கூட்டணியில் மொத்தம் 128 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ராஷ்டிரிய ஜனதாளம், காங்கிரஸ் கூட்டணிக்கு 114 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. ஆனால் திடீரென நேற்று முதல் நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சியின் 6 எம்.எல்.ஏக்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்து வருகின்றனர். இந்த 6 பேரையும் தொடர்பு கொள்ள முடியாமல் நிதிஷ் தரப்பு தேடி வருகிறது. இவர்களில் சிலர் கோவா சென்றுவிட்டதாகவும் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் மாயமான 6 ஜேடியூ எம்.எல்.ஏக்களையும் லாலுவின் மகனும் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கடத்தி சென்று அவரது வீட்டில் சிறை வைத்துள்ளதாக நிதிஷ்குமார் தரப்பில் குற்றம்சாட்டினர். இதனையடுத்து திடீரென போலீஸ் படை தேஜஸ்வி யாதவ் வீட்டுக்குள் நுழைந்து சோதனை மேற்கொண்டது. இதற்கு எதிராக தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி கட்சியின் போராட்டம் ஈடுபட்டனர். பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் தேஜஸ்வி யாதவ் வீடு முன் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.