
துபாய், நவ. 22- துபாயில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் சாகசத்தில் ஈடுபட்ட இந்திய விமானப்படையின் ‘தேஜஸ்’ போர் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் பைலட் உயிரிழந்தார். துபாயில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை, மிகப் பெரிய அளவில் விமானக் கண்காட்சியை ஐக்கிய அரபு அமீரகம் நடத்தி வருகிறது.அந்த வகையில், துபாயின் அல் மக்தோம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 17-ம் தேதி விமானக் கண்காட்சி தொடங்கியது.
இந்த கண்காட்சியில் உலகின் பல நாடுகளில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட விமானம் மற்றும் ட்ரோன் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்தன.
200-க்கும் மேற்பட்ட விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அணிவகுத்து நின்றன. இதையொட்டி, 12 கருத்தரங்குகளும் நடைபெற்றன. அதில் 450-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, விமானத் தொழில்நுட்பம் தொடர்பான தங்களது கருத்துகள், ஆலோசனைகள், தொலைநோக்குத் திட்டங்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில், 5 நாள் கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று, இந்தியா சார்பில் உள்நாட்டுத் தயாரிப்பான எச்ஏஎல் நிறுவனத்தின் தேஜஸ் இலகு ரக போர் விமானத்தை காட்சிப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

















