தேன்கனிக்கோட்டை வீரர் சாதனை

கிருஷ்ணகிரி/ ஓசூர்: மே 26-
எல்லை பாதுகாப்புப் படையில் பணிபுரியும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த வீரருக்கு ‘ஜீவன் ரக் ஷ பதக்’ விருது வழங்கப்பட்டது. மேலும், காஷ்மீரில் நடைபெற்ற பனி மாரத்தான் போட்டியில் தேன்கனிகோட்டையைச் சேர்ந்த வீரர் உலக சாதனை படைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை கிராமத்தைச் சேர்ந்தவர் உமாசங்கர். இவர் 2004 முதல் எல்லை பாதுகாப்புப் படைவீரராகப் பணிபுரிந்து வருகிறார். 2021 பிப். 14-ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் இவர் பணியிலிருந்தபோது, ஜோத்பூர் மாவட்டம் சுர்புரா அணைக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா வந்த 35 வயது பெண் மற்றும் 10 வயது பெண் குழந்தை, 7 வயது ஆண் குழந்தை ஆகிய 3 பேர் அணையில் தவறி விழுந்து உயிருக்குப் போராடினர். அங்கிருந்த உமாசங்கர் உடனடியாக அணையில் குதித்து, 3 பேரையும் உயிருடன் மீட்டார்.
இவரது வீரதீர செயலைப் பாராட்டி 2021-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் ‘ஜீவன் ரக் ஷ பதக்’ (பொதுமக்களின் உயிர் காக்கும் விருது) விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார். நேற்று முன்தினம் (மே 24) டெல்லி விஞ்ஞான பவனில் நடைபெற்ற விழாவில், உமாசங்கருக்கு ‘ஜீவன் ரக் ஷ பதக்’ விருது வழங்கப்பட்டது.
சாதனை புத்தகத்தில்… கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்தவர் சென்னப்பா. இவரது மகன் மது (28), காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த பிப். 25-ம் தேதி காஷ்மீர் பாரமுல்லா பகுதியில் உலக சாதனைக்காக பனி மாரத்தான் போட்டி நடந்தது.
இதில் பங்கேற்ற வீரர் மது,உறைபனியில் 10 கி.மீ. தொலைவை28 நிமிடம் 8 விநாடிகளில் கடந்துசாதனை படைத்தார். இந்த சாதனைக்காக அவருக்குப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும், ‘அஃபீஷியல் வேர்ல்ட் ரெக்கார்ட்’, ‘டபிள்யூ. ஆர்சிஏ மற்றும் அஃபீஷியல் ரெக்கார்ட்ஸ் பிரேக்கர்ஸ்’, ‘பிரஸ்டீஜியஸ் புக்ஆஃப் ரெக்கார்ட்ஸ்’, ‘இன்ஜினீயர்ஸ் சார்ம் வேர்ல்ட் ரெக்கார்ட்’ உள்ளிட்ட சாதனைப் புத்தகங்களில் அவரது பெயர் இடம்பெற்றது.