தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பித்தது எஸ்பிஐ

புதுடெல்லி, மார்ச் 13- தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வங்கி நேற்று சமர்ப்பித்தது. இந்தவிவரங்களை தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் வரும்15-ம் தேதிக்குள் பொதுமக்கள் பார்வைக்காக பதிவேற்றம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் நடைமுறையை மத்திய அரசு கடந்த 2018 ஆண்டு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின்கீழ், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதற்கான பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி வெளியிடும். ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். தேர்தல் பத்திரத்தில் பணம் செலுத்துபவரின் பெயர் இடம்பெற தேவையில்லை.பத்திரம் மூலம் ரூ.9,188 கோடி: 2017-18 மற்றும் 2021-22-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மொத்தம் 7 தேசியக் கட்சிகளும் 24 பிராந்தியக் கட்சிகளும் ரூ.9,188 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளன. இதில் பாஜகவின் பங்கு மட்டும் ரூ.5,272 கோடி. இது மொத்த நன்கொடையில்58 சதவீதம் ஆகும். இதே காலகட்டத்தில், காங்கிரஸ் ரூ.952 கோடியும், திரிணமூல் காங்கிரஸ் ரூ.767 கோடியும் தேர்தல்பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளன. தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிப்பவர் யார் என்பது ரகசியமாக வைக்கப்படுவதாகவும், இது கறுப்பு பணத்தைஊக்குவிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.இந்நிலையில், தேர்தல் பத்திரம் சட்டவிரோதமானது என்று கூறி, அந்த நடைமுறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து கடந்த பிப்ரவரி 15-ம் தேதி உத்தரவிட்டது. 2019 முதல் வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு எஸ்பிஐ-க்கு உத்தரவிடப்பட்டது.அவகாசம் கேட்ட எஸ்பிஐ: இந்த தகவல்களை திரட்டி, வகைப்படுத்தி தருவது சிக்கலான நடவடிக்கை. இதற்கு, ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ சார்பில் மார்ச் 4-ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 11-ம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு “தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடுமாறு கடந்த பிப்ரவரி 15-ம்தேதி உத்தரவிட்டோம். கடந்த26 நாட்களாக எஸ்பிஐ அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அதுபற்றி எதையும் தெரிவிக்கவில்லை. பல்வேறு கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டபோதிலும், அதுதொடர்பான அனைத்து தகவல்களும் மும்பையில் உள்ள எஸ்பிஐ தலைமை அலுவலகத்தில்தான் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. எனவே, அதில் இருந்து தகவல்களை தொகுத்து தருவது சுலபமான காரியம்தான். இதற்கு முன்பும் இதுபோன்ற பணிகளை எஸ்பிஐ குறித்த நேரத்தில் நிறைவேற்றியுள்ளது. அப்படி இருக்க, தேர்தல் பத்திர விவகாரத்தில் அவகாசம் கோருவது ஏன்? உச்ச நீதிமன்றஅரசியல் சாசன அமர்வு வழங்கியதீர்ப்பை எதிர்த்து ஒரு வங்கி அதிகாரி மேல்முறையீடு செய்வது, கண்டனத்துக்குரியது. தேர்தல் பத்திர விவரங்களை தற்போது வெளியிட வேண்டியது அவசியம். விவரங்களை கொடுக்க தவறினால் எஸ்பிஐ அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தது.