பாட்னா: ஜூலை 28 – பீகார் மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருந்தது. இதில் 35 லட்சம் வாக்காளர்களின் பெயர் விடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக நிதீஷ் குமார் இருக்கிறார். இக்கட்சி தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறது. இம்மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சூழலில் திடீரென இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. “இதுக்கு முன்னாடி இருந்த வாக்காளர் லிஸ்ட்டை நாங்க கணக்குல எடுத்துக்க மாட்டோம். புதுசா வாக்காளர் பட்டியலை உருவாக்கிறோம்” என சொன்னது. எனவே மாநிலம் முழுவதும் ஆட்களை அனுப்பி வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணிகளையும் மேற்கொண்டது. இதுவரை பிரச்சனை இல்லை. ஆனால், பின்னர் பிரச்சனை தொடங்கியது.அதாவது பாட்னா போன்ற நகரங்களில் மக்கள் ரேஷன் கார்டையோ, ஆதார் அட்டையையோ காட்டினால் ஓகே என டிக் அடித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், வங்கதேச எல்லையில், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இந்த ஆதாரங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படியெனில் இந்திய குடிமகன் அல்லாதோருக்குதான் அரசு ரேஷன் அட்டையையும், ஆதார் அட்டையையும் கொடுக்கிறதா? என்று கேள்வி எழுந்தது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்ற நிலையில், “ஆங் சரி, சரி ரேஷன், ஆதார் அட்டையை பரிசீலிக்க முயற்சி பண்றோம்” என்று ஆணையம் பதிலளித்திருந்தது. இப்படியாக ஒரு வழியாக 99% அளவுக்கு மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியலை சரி பார்த்திருப்பதாக தெரிவித்திருக்கும் ஆணையம், சுமார் 35 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பதாக கூறியிருந்தது. இந்த 35 லட்சம் பேரில் உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரண்டு வாக்காளர் அட்டையை வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள் என்று கூறியிருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் இதை மறுத்துள்ளன. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவசர கதியாக வாக்காளர்களை அடையாளம் காணும் பணியை செய்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.

















